சேலம் அரிசிபாளையம் ராஜகண்ணு தெருவைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றிவருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற சதாசிவம் தனது வீட்டின் முன்புறம் ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டின் அருகே ஏதோ சத்தம் கேட்டதால், அவர் வெளியே வந்து பார்த்தபோது, அடையாளம் தெரியாத மூன்று பேர் அவரது ஆட்டோவிலிருந்து பேட்டரியை கழற்றிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது சதாசிவம் திருடர்களை பார்த்து சத்தம் போடவே உஷாரான இரண்டு பேர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதில் ஒருவர் மட்டும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றுள்ளார். உடனே சதாசிவம் மோட்டார் சைக்கிளை பிடித்து இழுத்து திருடனை கீழே விழ செய்து பிடிக்க கடுமையாக முயற்சித்துள்ளார். பின்னர் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். அங்கிருந்து மீண்டும் அடையாளம் தெரியாத அந்த நபர் தப்பிக்க முயன்றபோது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து திருடனை சுற்றி வளைத்துள்ளனர்.