தமிழ்நாடு

tamil nadu

2 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் விமான சேவை தொடக்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 8:11 AM IST

Salem Airport: சேலத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் விமான சேவை தொடக்கம்
அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் சக்கரபாணி

2 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் விமான சேவை தொடக்கம்

சேலம்:சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்துள்ள காமலாபுரத்தில் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. கரோனா காலக்கட்டத்திற்கு முன்பு வரை, இந்த விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது.

விமான சேவை நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், தொழிலதிபா்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதுடன், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் எஸ்.ஆர்.பார்த்திபன் நேரில் சந்தித்து கோரிக்கை அளித்தார். அதன்படி, உதான் 5 திட்டத்தின் கீழ் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனத்தின் மூலம் பெங்களூரு, சேலம், கொச்சி இடையே விமானப் போக்குவரத்து சேவையை தொடங்க பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், பெங்களூர் - சேலம் வழித்தடத்தில் நேற்று முதல்கட்டமாக விமானம் இயக்கப்பட்டது. அதன்படி, நேற்று மதியம் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனத்தின் சார்பில் 72 பயணிகள் அமர்ந்து பயணம் செய்யும் வகையிலான ஏ.டி.ஆர். ரக விமானம், பெங்களூருவில் இருந்து மதியம் 12.40 மணிக்கு 34 பயணிகளுடன் சேலத்திற்குப் புறப்பட்டு வந்தது. இந்த விமானம் சேலம் விமான நிலையத்திற்கு மதியம் 1.40 மணியளவில் வந்து சேர்ந்தது.

இதனையடுத்து, பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு வந்த விமானத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, சக்கரபாணி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, சேலத்திலிருந்து கொச்சின் செல்லக்கூடிய விமானத்தை அமைச்சர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

இவை சேலத்திலிருந்து 02.05 மணிக்கு புறப்பட்டு, 03.15 மணிக்கு கொச்சி விமான நிலையத்தை சென்றடையும். மீண்டும் கொச்சியிலிருந்து 03.40க்கு புறப்பட்டு, 04.50க்கு சேலம் விமான நிலையத்தை வந்தடையும். அதேபோல், சேலத்திலிருந்து 05.15 மணிக்கு புறப்பட்டு, 06.15 மணிக்கு பெங்களூருக்கு விமான சேவை நடைபெற உள்ளது.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விமான சேவை தொடங்கியுள்ளதால், சேலம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான தருமபுரி, நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகளும் இந்த விமான சேவையை வரவேற்றுள்ளனர்.

சேலம் விமான சேவை குறித்து, மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் கூறியதாவது, “சேலத்திலிருந்து விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொழில் வளர்ச்சிக்கு இந்த சேவை பெரும் உதவிகரமாக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட இந்த சேவையை மீண்டும் தொடங்க பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் மத்திய அரசிடம் பல முறை வலியுறுத்தப்பட்டது.அதன் பலனாகவும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக திமுக பேரூராட்சித் தலைவர் மீது திமுக உறுப்பினர்களே புகார் - சேலத்தில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details