சேலம்:ஆதித்தமிழர் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சேலத்தில் நேற்று (செப். 26) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் கு. ஜக்கையன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் ஆதித்தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் இளங்கோவன் மற்றும் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
நீட் தேர்வு ரத்து
கூட்டத்தின் முடிவில் செய்தியாளரைச் சந்தித்த ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன், “மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிராகவும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை ஆதரிக்கிறோம்.
அடித்தட்டு மக்களுக்கான கல்வியை உறுதிப்படுத்தும் வகையில் நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்துசெய்ய ஆதித்தமிழர் கட்சி வலியுறுத்துகிறது. அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டின் அளவை அந்தச் சமுதாய மக்களுக்கே முழுமையாக வழங்கிடும் வகையில், உறுதியான அரசாணையை ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் நிலையைத் தமிழ்நாட்டில் கொண்டுவந்துள்ள திமுக அரசுக்கு வரவேற்பைத் தெரிவித்துக்கொள்கிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது. பாஜக அரசு இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
திமுகவுக்கு ஆதரவு
மத்திய தொகுப்பு மாநில தோப்புகளில் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் பெருமளவு இந்த இட ஒதுக்கீட்டால் பின்னுக்குச் செல்லும். எனவே அதனைத் தடுத்து நிறுத்திட தமிழ்நாடு அரசு ஆவன செய்திட வேண்டும்.
பீமா கோரேகான் வழக்கில் எந்தவித விசாரணையுமின்றி இந்தியாவின் தலைசிறந்தவர்கள் 15-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக ஒன்றிய அரசு விடுதலை செய்ய வேண்டும்.
அக்டோபர் மாதம் 6, 9ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களிலும் பரப்புரை மேற்கொள்ளும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: பி.இ, பி.டெக் படிப்புக்கு நாளை முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு