சேலம்:இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (மே.19) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் கரோனா தொற்றை ஒழிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சேலம், இரும்பாலை வளாகத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. நாளை (மே.20) இதனை முதலமைச்சர் நேரில் பார்வையிடவுள்ளார். அவரை வரவேற்க கட்சியினர், பொதுமக்கள் என யாரும் வரவேண்டாம். இது தொற்று காலம் என்பதால் வரவேற்பு எதுவும் வழங்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
சேலத்தில் இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனைகள், தங்களது படுக்கை வசதிகளைவிட கூடுதலான நோயாளிகளை சிகிச்சைப் பெற அனுமதித்துள்ளன. இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் நோயாளிகள் எந்த பாதிப்பும் அடையாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.