சேலம்: குகை பகுதியைச் சேர்ந்தவர்கள் இயேசுதாஸ் (51) - ரேவதி (47) தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ரேவதிக்கும், இயேசுதாஸுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.
இதனால் ரேவதி, சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். கணவரின் நடவடிக்கைகள் பிடிக்காத நிலையில் அவருடன் சேர்ந்து வாழ ரேவதிக்கு விருப்பமில்லாமல் இருந்துவந்தது.
திராவக வீச்சு
ஆகையால் நேற்று (ஆகஸ்ட் 30) சேலத்தில் வழக்கறிஞர் ஒருவர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி இருவரும் பிரிந்துசெல்ல முடிவெடுத்தனர். இதற்காக நாமக்கல்லிலிருந்து ரேவதி அவரது தாயார் ஆராயி ஆகியோர் நேற்று மாலை சேலம் வந்தனர்.
பின்னர் ஊர் திரும்புவதற்காக ரேவதியும், அவரது தாயாரும் பழைய பேருந்து நிலையம் சென்று பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளனர். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இயேசுதாஸ், தான் மறைத்துவைத்திருந்த திராவகத்தை ரேவதி மீது ஊற்றிவிட்டு தப்பி ஓடினார்.