நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. நான்காம் கட்ட ஊரடங்கானது இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனாவின் தாக்கம் உச்சம் பெற்றுவருகிறது.
அதன்படி, சேலம் மாவட்டத்திற்கு வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கரோனாவின் தாக்கமும் அதிகரித்து வருகிறது.
இதுவரை சேலத்தில் 144 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ள நிலையில், சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள பிரபல தனியார் உணவக உரிமையாளருக்கும், உணவக ஊழியர்கள் மூன்று பேருக்கும் கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து உணவகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள மற்ற கடை உரிமையாளர்களும், உணவகங்களுக்கு பார்சல் வாங்க வந்த வாடிக்கையாளர்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. நோய்த் தொற்று பரவியதை அடுத்து, உணவகம் மூடப்பட்டுள்ள நிலையில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அவ்வழியே பொதுமக்கள் செல்லாத வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.