தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த கௌதம் என்பவர், கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி ஹைதராபாத்தில் இருந்து திருப்பூருக்கு தனியார் சொகுசு பேருந்தில் பயணம் செய்தார். திருப்பூர் நகைக் கடை ஒன்றுக்கு வழங்குவதற்காக 3 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகளையும் கௌதம் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, தனியார் சொகுசு பேருந்து சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஓய்வுக்காக நிறுத்தப்பட்டபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பேருந்தில் இருந்த வைர நகைகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நகை உரிமையாளர் கெளதம், சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் பிரதீப் குமார் உத்தரவின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணிகர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்திவந்தனர்.
வட மாநிலங்களைச் சேர்ந்த சிலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் விசாரணையை தொடர்ந்து, திருடுபோன 3 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
3 கோடி ரூபாய் வைர நகைகள் திருட்டு இதுகுறித்து சங்ககிரி காவல் நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணிகர் கூறுகையில், தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவ இடம், பெங்களூரு, சித்தூர், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் ஆகிய இடங்களில் விசாரித்து கிடைத்த ரகசிய தகவலின்படி, சங்ககிரி ஆய்வாளர் முத்துசாமி தலைமையிலான தனிப்படையினர் மகாராஷ்டிரா , மத்தியப்பிரதேசம் மாநிலத்திற்கும் சென்று விசாரணை நடத்தினர்.
இதில், மத்திய பிரதேசம் தார் மாவட்டம் முத்தணி கோட் என்ற இடத்தை சேர்ந்த முத்தப்பா, அசாம், முனீர், அகமது, அஜய் தோர் ஆகிய ஐந்து நபர்கள் இந்த நகை திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் 5 பேரையும் உடனடியாகக் கைது செய்து, காணாமல் போன நகைகளை மீட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
3 கோடி ரூபாய் வைர நகைகள் திருட்டு - 5 வடமாநில இளைஞர்கள் கைது! நகை திருட்டு வழக்கை சிறப்பாகக் கையாண்டு, துரிதமாக திருடப்பட்ட நகைகளை மீட்ட தனிப்படை போலீசாருக்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணிகர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.