சேலம்: சேலம் ஆத்தூர் அருகே 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராவண ஈஸ்வரமுடைய நாயனாா் கோயில் என்ற சிவன் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் பொன். வெங்கடேசன் கூறுகையில், "சேலம் வரலாற்று ஆய்வு மையம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பழமையான கல்வெட்டுகளைக் கண்டெடுத்து ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில், ஆறுகள் உட்பகுதியில் கல்வெட்டுகளை தேடியபோது அழிந்துபோன சிவன் கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
12ஆம் நூற்றாண்டில் ஆறகளூா், மகதை மண்டலம் என்பதன் தலைநகராக விளங்கியுள்ளது. இதனை பொன்பரப்பின வானகோவரையன் என்ற குறுநில மன்னா் ஆட்சி செய்து உள்ளார். இவர், சோழப் பேரரசன் மூன்றாம் குலோத்துங்கனின் படைத் தளபதியாகவும் இருந்துள்ளார். பொன்பரப்பின வானவ கோவரையன் காலத்தில்தான் ஆறகளூா் காமநாதீஸ்வரா் கோயிலும், கரிவரதராஜப் பெருமாள் கோயிலும் கட்டப்பட்டு உள்ளது என்று சான்றுகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், ஆறகளூா் கால்நடை மருத்துவமனை அருகே இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கைலாசநாதா் தோப்பில், ஒரு பழமையான சிவன் கோயில் இருந்து அழிந்து போனதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இங்கு ஒரு நந்தி சிலை இப்போதும் வழிபாட்டில் உள்ளது. இந்தப் பகுதியில் இருந்த 6 சிற்பங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னரே காணாமல் போய்விட்டன. இங்கு வழிபாடு செய்யப்பட்ட பைரவா் சிலை தற்போது, அருகிலுள்ள மாரியம்மன் கோயில் வளாகத்திலும், சண்டிகேசுவரா் சிலை தேர்நிலை தெற்கு கரையிலும் இன்றும் வழிபாட்டில் உள்ளது.