ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மழையூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி விமலேஸ்வரி தம்பதியிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகள் பிரியங்கா (23) செவிலியர் படிப்பு முடித்து விட்டு, வேலூர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி 3ஆம் தேதி காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற பிரியங்கா வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர்.
அப்பொழுது ஊரின் அருகே உள்ள விவசாயக் கிணற்றின் அருகே பிரியங்காவின் காலணி இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த பிரியங்காவின் பெற்றோர், உடனடியாக கலவை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், விவசாயக் கிணற்றில் குதித்து, தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் நீண்ட நேரம் தேடியும், பிரியங்கா கிடைக்காமல் போனதால், வேறு எங்காவது சென்றிருப்பார் என உறவினர்கள் தெரிவித்ததை அடுத்து, தேடும் பணியானது கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரியங்காவின் தாத்தா இன்று (ஜன.5) விடியற்காலை 4 மணி அளவில் கிணற்றில் பார்த்தபோது, பிரியங்காவின் உடல் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, பிரியங்காவின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.