TNEB Assistant Executive Engineer took bribe Video goes viral ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த மாசாப்பேட்டை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கோவிந்தராஜ் (42). இவரது வீட்டிற்கு முன்பு 50 ஆண்டுகளுக்கும் மேலாக டிரான்பார்மர் உள்ளதால் வீட்டிற்கு செல்ல வழியில்லாமல் தவித்து வந்து உள்ளனர்.
இதனால் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள அந்த டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பாக, கோவிந்தராஜ் ஆற்காடு மின்வாரிய அலுவலகத்தில் மனு அளிக்க சென்று உள்ளார்.
அங்கே, உதவி செயற்பொறியாளர் தனலட்சுமி என்பவரை சென்று சந்தித்த கோவிந்தராஜ், மனுவை வழங்கிய போது, இதற்கு சுமார் ரூபாய் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலவாகலாம் என்றும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்து வேலையை முடித்து தருகிறேன் என்றும் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இது மட்டும் இன்றி, குறைக்கும் பணத்தை தனக்கு லஞ்சமாக கொடுக்குமாறு உதவி செயற்பொறியாளர் தனலட்சுமி கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து உடனடியாக கோவிந்தராஜ், தான் வைத்து இருந்த சுமார் 4 ஆயிரம் ரூபாயை உதவி செயற்பொறியாளர் தனலட்சுமியிடம் கொடுத்து விட்டு வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. வீட்டில் மனைவி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கூலித் தொழிலாளி கோவிந்தராஜ் மீண்டும் மின்சார அலுவலகம் சென்று, உதவி செயற்பொறியாளர் தனலட்சுமி கேட்ட லஞ்சப்பணத்தை கொடுக்க வழி இல்லை என கூறியுள்ளார்.
இதனால், கூலித் தொழிலாளி கோவிந்தராஜ் கொடுத்த லஞ்சப் பணத்தை தனலட்சுமி திருப்பி கொடுப்பது போல் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுமக்கள் தங்களது தேவைக்கு பொறுமை காக்காமல் அவசரப்படும் போது அதனை அரசு அதிகாரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கையூட்டு பெறுகின்றனர்.
இதனைத் தடுக்க வேண்டுமெனில் பொதுமக்கள் அதிகாரிகள் என இருவருமே தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். மேலும், லஞ்சம் கொடுப்பதும் தவறு, வாங்குவதும் தவறு என்ற ஆழ்ந்த கருத்தை உள்வாங்கி செயல்பட வேண்டும் என்று இந்த வீடியோ காட்சிகளை பார்பவர்கள் கூறும் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க:ஃபகத் ஃபாசில் வீடியோவை ஷேர் செய்தால் நடவடிக்கை? - ஃபகத்திற்கு கோரிக்கை வைத்த கிருஷ்ணசாமி!