ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் டாஸ்மாக் மதுவை, கள்ளச்சந்தையில் விற்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி IAS எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதிகபட்சமாக 108° பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் சூழலில், வெயிலின் தாக்கத்திலிருந்து சமாளிக்கும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் வளர்மதி, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் வளர்மதி IAS பேசியதாவது, “ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளதால், வெயில் நேரங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தண்ணீர், எலுமிச்சை சாறு, மோர் ஆகியவற்றை வழங்குவதோடு மருத்துவ உதவிகளை வழங்க தேவையான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் பகல் நேரங்களில் பணியாற்றும் ஊழியர்களை சுழற்சி முறையில் பணியாற்ற வைப்பதோடு, வெயில் நேரங்களில் இடைவெளி கால அளவை அதிகரிக்க தொழிற்சாலை நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக” தெரிவித்தார்.