ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மூதூர் திரவுபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவபாதம்(42). ஆட்டோ ஓட்டுநரான சிவபாதம் அவரது மனைவியுடன் நீண்ட காலமாக அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று (டிச.24) இரவு வழக்கம் போல் அவரது வீட்டின் முன்பாக ஆட்டோவை நிறுத்தி வைத்துள்ளார். மேலும், அவரது சொந்த உபயோகத்திற்காக வாங்கப்பட்ட டாடா சுமோவை வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்தார்.
இதையடுத்து, இரவு 11மணி அளவில் அதேபகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிவபாதம் வீட்டின் கதவைத் தட்டி ஆட்டோ தீ பற்றி எரிவதாகத் தெரிவித்தார். இதில், அலறியடித்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடி வந்த சிவபாதம் அங்கிருந்தவர்களின் உதவியுடன் ஆட்டோவில் பற்றி எரிந்த தீயைத் தண்ணீர் ஊற்றி அணைத்தார். இதற்கிடையில் வீட்டருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா சுமோவும் தீ பற்றி எரிந்துள்ளது. தீயை அணைக்க முயற்சி செய்தும் தீயை அணைக்க முடியாததால், அரக்கோணம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பு டாடா சுமோ முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. மரம் நபர்கள் வேண்டுமென்றே இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை உணர்ந்து சிவபாதம் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் ஆட்டோ மற்றும் டாடா சுமோவுக்கு தீ வைப்பதற்கு முன்பாக, அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மாரில் மின்சாரத்தைத் துண்டித்துள்ளனர். இதனால், இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளனர். அதைத்தொடர்ந்து இன்று (டிச.25) காலையில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் விநியோகிக்கப்பட்டது.