ராணிப்பேட்டை:அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் திருப்பூரைச் சேர்ந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி, அரை சவரன் கம்மல் மற்றும் ஆயிரத்து நூறு ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற வாலிபரை, அரக்கோணம் ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் பகுதி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (69). இவர் இன்று (அக்.30) அதிகாலை அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயிலில், காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர், காமாட்சி அம்மன் கோயில்களை தரிசனம் செய்வதற்காக காஞ்சிபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ரயில் தக்கோலம் ரயில் நிலையம் அருகில் செல்லும் போது, திடீரென 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி, லட்சுமி அணிந்திருந்த அரை சவரன் கம்மலைக் கேட்டுள்ளார். அவர் தர மறுத்த நிலையில், அந்த நபர் அவரின் வலது கை மணிக்கட்டில் கத்தியால் வெட்டியுள்ளார்.
இதில் பயந்து போன லட்சுமி, தான் அணிந்திருந்த அரை சவரன் கம்மல் மற்றும் ஆயிரத்து நூறு ரூபாய் பணத்தை அவரிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த அந்த நபர், ரயில் தக்கோலம் ஸ்டேஷன் வரும்போது கீழே குதித்து தப்பி ஓடியுள்ளார்.