ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வீராணம் புதூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர், இளங்கோ (29). இவர் காஞ்சிபுரம் மாவட்டம், விஷ்ணு காஞ்சி பி-2 காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சந்தியா (23) என்பவருடன், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு சுபாஷ் என்கிற ஒரு வயது குழந்தை உள்ளது.
இந்நிலையில், இவர் நேற்றைய முன்தினம் (நவ.20) இரவு, தனது பணி நேரம் முடிந்த பின்னர், இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, பெருவளையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக பள்ளம் தோண்டிய மண், சாலை ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்துள்ளது.
அதனால் அப்பகுதியில் மாற்று வழியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும், இருட்டில் மணல் மேட்டின் மீது மோதியதில் காவலர் இளங்கோ தூக்கி வீசப்பட்டுள்ளார். பின்னர் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்ததில், காவலர் இளங்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.