ராணிப்பேட்டை:கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு திருப்பலி பூஜையில் அருட்தந்தையர்கள் குழந்தை இயேசுவின் பிறப்பை அறிவித்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இயேசு கிறிஸ்து பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் இன்று (டிச.25) வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இதனை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை ஆகியவை நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் வீடுகளில் இயேசுநாதர் பிறந்த மாட்டு கொட்டாய் குடில்கள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நள்ளிரவு நடந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் புதிய ஆடைகளை அணிந்து கொண்டு தேவாலயத்திற்கு வருகை தந்தனர். தொடர்ந்து திருப்பலி பூஜையில் சிறப்பு விருந்தினராக புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை லியோ மரிய ஜோசப் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் விழாவையோட்டி திருப்பலி பூஜையை நிகழ்த்தினார்.