ராணிப்பேட்டை:காவேரிப்பாக்கத்தை அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் அதே பகுதியில் செங்கல் சூளையில் கூலி வேலை செய்கிறார். ஆறுமுகத்திற்கும் பனப்பாக்கம் அடுத்த சிறுவளையம் பகுதியை சேர்ந்த கனிமொழிக்கும் திருமணம் நடைபெற்று இவர்களுக்கு ஒன்றரை வயதில் கபிலேஷ் (1 1/2) என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கனிமொழி 9 மாத கர்ப்பிணியாக உள்ள காரணத்தினால் சிறுவளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் கடந்த ஒரு மாதமாக தங்கி வருகிறார். ஆறுமுகம் அவ்வப்போது கனிமொழியை வந்து பார்ப்பது வழக்கம்.
இந்நிலையில் நேற்று (ஜூலை 10) இரவு 11 மணி அளவில் குழந்தை கபிலனின் தலையில் அடிபட்டதாகவும், ரத்தப்போக்கு அதிகமாக உள்ளதாகவும் கூறி கனிமொழி ஆறுமுகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இருவரும் குழந்தையை அழைத்துச் சென்று வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இரண்டு மணி நேர சிகிச்சைக்கு பிறகு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தான்.
தொடர்ந்து மருத்துவர்கள் குழந்தையின் தலையில் ஏற்பட்ட காயம் தற்செயலாக ஏற்பட்டது போன்று இல்லை வேண்டுமென்றே தாக்கப்பட்டது போல உள்ளது என சந்தேகித்து நெமிலி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் சிறுவளையம் பகுதியில் உள்ள கனிமொழி வீட்டில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரிக்கப்பட்டன. மேலும் நெமிலி காவல் துறையினர் ஆறுமுகம் மற்றும் கனிமொழியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு!