ராணிப்பேட்டை அருகே அரசின் இலவச பொங்கல் சேலைகள் தயாரிக்கும் பணி தீவிரம் ராணிப்பேட்டை:ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு 1983ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வோரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களிலுள்ள ஏழை மக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டையில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் இயங்கி வருகிறது. கடந்த 1935-இல் இருந்து செயல்பட்டு வரும் இந்த சங்கத்தில் 700 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும், 150 நெசவாளர்கள் சேலைகள் நெசவு செய்து தரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வருகிற 2024ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் இலவச சேலைகளை வழங்குவதற்காக 66 ஆயிரத்து 320 சேலைகள் தயாரிக்கும் ஆர்டர் இந்த சங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, நெசவாளர்கள் 10 டிசைன்களில் சேலைகள் நெசவு செய்து, அதன் மீது 'பொங்கல் 2024ம் வேட்டி சேலை வழங்கும் திட்டம்' என அச்சிட்டு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.. அப்படியென்ன என்ன ஸ்பெஷல்..?
இது குறித்து கூட்டுறவு உற்பத்தி சங்கத்தின் முன்னாள் தலைவர் தமிழ்மணி கூறியதாவது, “இன்னும் சில தினங்களில் அனைத்து சேலைகளும் இங்கிருந்து கோ-ஆப்டெக்ஸ்-க்கு அனுப்பி வைக்கப்படும். கைத்தறித்துறை அமைச்சர் காந்தியின் வழிகாட்டுதலின் பேரில், இந்த சங்கம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதுபோல் அடுத்த ஆண்டுகளில் பெடல் தறி உற்பத்தி திட்டத்தை அதிகரித்து, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி தர வேண்டும். மேலும் பெடல் தறி இயந்திரங்கள், அதற்கான உபகரணங்களுக்கான அச்சு, குழல் உள்ளிட்ட பொருட்களையும் அரசு எங்களுக்கு வழங்க வேண்டும்.
பெடல் மற்றும் விசைத்தறிகளுக்கு ஆயிரம் யூனிட் இலவச மின்சாரத்தை அரசு வழங்குகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம், எங்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்” என கூறினார்.
இதையும் படிங்க: நெல்லை விரைந்த நடிகர் விஜய்..வடை பாயசத்துடன் தயாராகும் தடபுடல் விருந்து!