ராணிப்பேட்டை:பறக்கும் சாலை அமைப்பதற்காக செங்காடு மோட்டூர் ஏரியில் இருந்து மண் எடுக்க, எதிர்ப்பு தெரிவித்த தனி நபருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை - பெங்களூரு பறக்கும் சாலை அமைக்க, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த செங்காடு மோட்டூர் ஏரியில் இருந்து மண் எடுக்கும் பணிகள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏரியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு வரும் காரணத்தால், மண் அள்ளுவதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், ஏரியில் மண் எடுக்க வந்த இயந்திரங்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, மண் எடுக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் அடுத்து, மண் அள்ளும் பணியைத் தடுத்து நிறுத்திய குப்பன்(39) என்ற தனிநபருக்கு தகரகுப்பம் மற்றும் செங்காடு ஆகிய 2 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.