வாங்கிய கடனுக்காக வீட்டை அபகரித்துத் துரத்தியதாக குடும்பத்துடன் தற்கொலை முயற்சி ராணிப்பேட்டை:காவனூரை சேர்ந்த சத்தியராஜ் என்பவர், வீட்டை அடமானம் வைத்து வாங்கிய கடனுக்காக வீட்டை அபகரிக்க முயல்வதோடு, தங்களை அடித்து துன்புறுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இரு பெண் குழந்தைகள் உள்பட குடும்பத்தோடு பெட்ரோல் ஊற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆற்காடு அடுத்த காவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 32). இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், ஜீவிதா (12), யுவராணி (10) ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இவர் தான் வசிக்கும் பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர், கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கால்நடை மருத்துவரான தினகரன் என்பவரிடம் தனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து 5 லட்ச ரூபாய் பணத்தை, 2 ரூபாய் வட்டிக்கு கடனாக பெற்றதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த 4 மாதங்களாக வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே கடன் கொடுத்த தினகரன், வீட்டை தனது பெயருக்கு மாற்றி விட்டதாக ஆவணங்களைக் காட்டி சத்தியராஜை குடும்பத்துடன் வெளியேறுமாறு கூறி வந்துள்ளதாக தெரிகிறது.
அதையடுத்து சத்தியராஜ், முறையாக வட்டியை செலுத்தி விடுவதாகக் கூறியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தினகரன் தனது ஆதரவாளர்களுடன் சென்று சத்தியராஜை தாக்கி, வீட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேறுமாறு வற்புறுத்தியதாகத் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பள்ளியில் படிக்கும் தனது இரு மகள்கள், தாய், தந்தை, பாட்டி, தாத்தா என அனைவரையும் அழைத்துக் கொண்டு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக வந்த சத்தியராஜ், கண்ணீர் மல்க அழுது தரையில் படுத்துப் புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை திடீரென எடுத்து அனைவரின் மீதும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணிப்பேட்டை போலீசார் உடனடியாக பெட்ரோல் கேனை பிடுங்கியதோடு, அனைவரின் மீதும் தண்ணீர் ஊற்றி அவர்களை பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி, தற்கொலைக்கு முயன்ற சத்யராஜிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:பெங்களூரில் அரங்கேறிய மதுரை கேங் வார்.. முன்விரோதம் காரணமா.. போலீஸ் விசாரணை!