ராமநாதபுரம் மாவட்ட கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள், அரசின் நலத்திட்டங்கள் பெறும் வகையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைகளாக மாற்றித்தரக்கோரி ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்தனர்.
தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பெண்கள் ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு
ராமநாதபுரம்: அரசின் நலத்திட்டங்கள் பெறும் வகையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைகளாக மாற்றித்தரக்கோரி தங்கச்சிமடத்தை சேர்ந்த பெண்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து ஆட்சியர் பரிசீலனை செய்வதாக தெரிவித்தார். அதனையடுத்து மாவட்ட கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி கூறியதாவது, "மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் ஏழை மீனவர்கள் பல்வேறு இன்னல்களால் வாழ்வாதாரத்தை தொடர முடியாமல் கடினமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இச்சூழலில் அரசின் நிவாரண உதவிகள் இவர்களுக்கு உதவிக்கரமாக இருந்து வருகிறது.
இச்சூழலில் 90 சதவீதம் பேருக்கு வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்காகன என்பிஹெச்ஹெச் என்ற குறியீட்டு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனவே, அரசின் நிவாரண உதவிகள் பெற அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைகளாக மாற்றி வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.