ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை கம்மாயை பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, "ராமநாதபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜசூரியமடை ஊராட்சியில் பாய்க்கரை, அச்சடிப்பிரம்பு, கோவிந்தனேந்தல், வன்னிக்குடி, சக்கரக்கோட்டை அம்மன்கோயில் ஆகிய கிராமங்களில் சங்கரக்கோட்டை கண்மாய் நீர்பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். சில ஆண்டு காலமாக மழை அளவு குறைந்து வருவதால் கண்மாயில் நீர்வரத்து குறைவாகவே உள்ளது.
இந்த நிலையில், பொதுமக்களின் கருத்து கேட்கமால் அரசோ சில நபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சக்கரக்கோட்டை கண்மாய் பறவைகள் சரணாலாயமாக மாற்ற முடிவு செய்துள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால் கண்மாயில் நாட்டு கருவேல மரங்கள் அதிகமாக பரவி அது மோசமான தருவாயில் உள்ளது. இதை பயன்படுத்தி சில சமூகவிரோதிகள் இங்கு வந்து மது அருந்துதல், கஞ்சா விற்பனை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆடு மாடு மேய்க்கும் பெண்கள் கண்மாய் பகுதியில் மேய்சலுக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.
அதுமட்டுமல்லாது வனத்துறையினர் இப்பகுதிகளில் ஆடு, மாடுகளை மேய்க்க அனுமதி மறுக்கின்றனர். வனத்துறையினர் கண்மாயில் தாழ்வான பகுதிகளிலிருந்து பறவைக்களுக்காக கால்வாய் போன்று தோண்டி குட்டைகள் அமைத்துள்ளனர். இதனால் கண்மாயிலிருந்து நீர் எடுத்து விவசாயித்திற்கு பயன்படுத்த வனத்துறையினர் அனுமதி மறுக்கின்றனர்.