ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முகமது சதக் பொறியியல் கல்லூரியில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோருக்கான கல்வி இயக்கம் சார்பில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் 2019-2021 என்ற திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகரன், திருவாடானை எம்எல்ஏ கருணாஸ், கூட்டுறவுத் தலைவர் முனியசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய அமைச்சர், ”தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய இரு மாவட்டங்கள் சிறப்பு கவனம் பெற வேண்டிய மாவட்டங்களாக இருக்கின்றன. அதன் அடிப்படையில் ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்படுத்த தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டங்களை இந்த மாவட்டங்களில் செயல்படுத்திவருகிறது. இதனடிப்படையில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் 2019-2021 என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்திவருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இரண்டு லட்சத்து 26 ஆயிரத்து 560 மொத்த நபர்களில் 30 விழுக்காட்டினர் (67 ஆயிரத்து 968) கல்லாதோர் 11 ஒன்றியங்களில் உள்ள 332 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாலை நான்கு முதல் ஏழு மணி வரை அடிப்படை எழுத்தறிவு எண்ணறிவு வழங்கப்பட்டு முன்னேற்றமடைய பயிற்சி அளிக்கப்படும். தமிழ்நாட்டில் கல்லாதார் இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் மிக முக்கிய எண்ணமாக உள்ளது" என்று பேசினார்.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பின்தங்கிய மாவட்டங்களாக உள்ள ராமநாதபுரம் மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்துவதில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் 2019 தொடங்கி செயல்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் கல்லாதோர் இல்லாத நிலையை உருவாக்க நாங்கள் இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். வருகின்ற கல்வியாண்டு முதல் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலணி ஷூவாக மாற்றப்படும்" என்றார்.