ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஒன்றியம், ஆண்டாவூரணி ஊராட்சிக்கு உள்பட்ட பனிச்சகுடி கிராமத்தில் சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவில், அதே ஊரைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் சரவணன் மூலம் ஊரணி மராமத்துப் பணிகள் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.
அதற்கு ஏற்கனவே பல கட்டங்களாக தொகை வழங்கப்பட்ட நிலையில், இறுதியாக 34 ஆயிரம் ரூபாய் நிலுவைத்தொகை இருந்துள்ளது.
அந்த நிலுவைத் தொகையை ஆண்டாவூரனி ஊராட்சி மன்ற செயலர் இந்திரா, வங்கியில் இருந்து எடுத்து வந்து ஆண்டாவூரணி அலுவலகத்தில் வைத்து சரவணனிடம் கொடுக்கும்போது இருவருக்குமிடையே நடக்கும் உரையாடல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
மொத்தம் 9 ஆயிரம்தான்
"ஊராட்சி தலைவருக்கு ஐந்தாயிரம் ரூபாய், எனக்கு ஆயிரம் ரூபாய், மேனேஜருக்கு இரண்டாயிரம் ரூபாய், ஓவர்சீயருக்கு 1000 ரூபாய். இல்லை என்றால் அங்கு போய் என்னால் நிற்க முடியாது" என்று ஊராட்சி செயலர் இந்திரா கூறுகிறார். தொடர்ந்து மொத்தம் ஒன்பதாயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு மீதித் தொகையை சரவணன் கொடுக்கிறார்.
பின்னர், செயலர் இன்னொரு அலுவலரின் பெயரைச் சொல்லி ”அவருக்கு பணம் கொடுங்கள்” என்று கூற, ”அவர் வாங்க மாட்டார்” எனக் கூறி பணத்தை வாங்கிகொண்டு சரவணன் வெளியேறினார்.
ஊராட்சி செயலர் லஞ்சம் வாங்கிய காணொலி இந்நிலையில், ஒப்பந்தகாரர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில், காணொலி ஆதாரத்தை வைத்து ஆண்டாவூரணி ஊராட்சி செயலர் இந்திரா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வெளிப்படையாக அரசு அலுவலகத்தில் ஒவ்வொரு அலுவலர்களுக்கும் எவ்வளவு பணம் என்று நிர்ணயித்து, ’இந்தியன்’ படத்தில் இடம் பெற்ற காட்சி போல் விளக்கும் இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மறுபடியும் முதலில் இருந்தா? புது தாலியுடன் வனிதா விஜயகுமார் செல்ஃபி