ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் சுற்றியுள்ள தீவுகளிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு அவ்வப்போது கடலட்டை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன. ராமநாதபுரம் கடல் வழியாக கடத்தல் சம்பவத்தைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து 24 மணி நேரம் ரோந்து பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்றிரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொது மக்களுக்கு அளித்த பிரத்யேக தொலைபேசி எண்ணுக்கு வந்த தகவலையடுத்து காவல் துணை ஆய்வாளர் குணதீஸ் மற்றும் காவல் துறை அலுவலர்கள் பாம்பன் தெற்கு கடற்கரையிலிருந்து தனி படகு மூலம் பாம்பன் அருகேயுள்ள தீவுகளில் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி சென்றபோது அவர்கள் தங்கள் கையிலிருந்த ஒரு மூட்டையை கடலில் வீசிவிட்டு சென்றனர்.
இதனையடுத்து, கடலில் வீசிய மூட்டையை பரிசோதித்தபோது அதில், ஆறு பாக்கெட்டுகளில் சுமார் 12 கிலோ கஞ்சா மற்றும் ஜி.பி.எஸ் (திசைகாட்டும் கருவி) இருந்தது தெரியவந்தது. மேலும், தப்பிச் சென்றவர்களை பிடிப்பதற்காக அவர்களை விரட்டி சென்றபோது கடத்தல்காரர்கள் மூன்று பேர் கடலில் குதித்து மாயமாகினர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.