ராமேஸ்வரம் தீவையும் பாம்பன் நிலப்பரப்பையும் இணைப்பதில் முக்கியப் பங்கு வைப்பது பாம்பன் ரயில் பாலம். இந்தப் பாலம் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட நூறு ஆண்டுகளைக் கடந்த பின்பும் தற்போது வரை ரயில் சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், அவ்வப்போது பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் சிறு சிறு பழுது ஏற்பட்டு வருவதால், புதிய ரயில் பாலம் கட்டுவதற்காக மத்திய அரசு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்தது.
தொடர்ந்து, புதிய பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு சார்பில் 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து, புதிய பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று(பிப்.23) பாம்பன் ரயில் பாலம், தூக்கு பாலம், புதிதாக அமைக்கப்பட்டு வரும் புதிய ரயில் பாலம் ஆகியவற்றின் உறுதித் தன்மை குறித்து தென்னக ரயில்வேயின் தலைமை பொறியாளர்(பாலம் பிரிவு) ஸ்மித் சின்கால் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களிடம் கலந்துரையாடினார்.