தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெடுஞ்சாலைகளில் மரம் வளர்க்க புதிய முறை... அசத்தும் அலுவலர்கள்!

ராமநாதபுரம்: நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நட்டு வைக்கப்படும் மரங்களை பாதுகாக்க, புதிய வழிமுறைகளை பின்பற்றுவதாக ஆட்சியர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

மரம் வளர்க்க புதிய முறை

By

Published : Oct 6, 2019, 11:22 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் காவனூர் ஆரம்பச் சுகாதார நிலையம் அருகே பிரதான சாலையில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் கலந்துகொண்டு சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நடும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

அனைத்து இடங்களிலும், சாலையின் ஓரங்களிலும் நிழல் தருவதற்காக மரங்கள் நட்டு வைக்கப்படுவது வழக்கம். ராமநாதபுரத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நட்டு வைக்கப்படும் மரங்களைப் பாதுகாக்க, புதிய வழிமுறையைப் பின்பற்றுகின்றனர். அதாவது மரக்கன்றுகள் நடவுள்ள இடத்தின் இருபுறங்களிலும், பிவிசி குழாய் வைத்து, அதில் இயற்கை உரம், மணல் கொண்டு இரு முனையும் நிரப்பி, பின் மரக்கன்று நடுவில் வைக்கப்பட்டு, அதன்பின் மணல் கொண்டு குழி மூடப்படுகிறது.

ஆட்சியர் வீர ராகவ ராவ் பேட்டி

இவ்வாறு செய்வதன் முலம், ஒருமுறை தண்ணீர் ஊற்றினால், பத்து நாட்கள் வரையில் தண்ணீர் மணலில் படிந்து அது மரம் பட்டுப்போகாமல் காப்பாற்றும் என்று நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், "ராமநாதபுரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் சாலை இருபுறத்திலும், தற்போது வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் இந்த புதிய வழிமுறையைப் பின்பற்றி நடப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை மரத்தின் விளைச்சல் அதிகம் கிடைப்பதால் விவசாயிகளிடம் இருந்து பனங்கொட்டைகளைப் பெற்று, அதைக் கண்மாய்களின் ஓரங்களில் நடுவதற்கான பணிகள் அனைத்து துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரிப்பைப் பொறுத்தவரையில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், அரசு கட்டடங்களின் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைக்க அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details