ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் டீசல் விலை உயர்வை கண்டித்தும், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அபரதம் விதிப்பதைக் கண்டித்தும், ஜூலை 20ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக, 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடித் தொழிலுக்குச் செல்லவில்லை.
இதுகுறித்து மீனவர்கள் கூறும்பொழுது,” டீசல் விலை உயர்வு அதிகமாக இருப்பதாலும், மானிய விலையில் டீசல் கிடைக்காததாலும் அதிக பணம் கொடுத்து டீசல் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களால் மீன்பிடித் தொழிலுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றனர்.
இந்நிலையில் மீனவர்களுக்கும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது, மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட அட்டையின் மூலமாக மானிய விலையில் டீசல் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று(ஆக.1) ராமேஸ்வரத்தில் மீனவர் சங்க கூட்டம் நடைபெற்றது. அதில், வரும் திங்கள்கிழமை(ஆக.3) முதல் வழக்கம் போல மீன்பிடித் தொழிலுக்குச் செல்வதாக முடிவு செய்துள்ளனர். இதைடுத்து, பத்து நாள்களுக்கு மேலாக நீடித்து வந்த மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் செல்வராஜ் கூறும்பொழுது,” அமைச்சரின் உறுதியைத் தொடர்ந்து நாங்கள் மீன்பிடிக்க செல்ல முடிவு எடுத்துள்ளோம். மீனவர்கள் டீசல் வாங்கும் நிலையங்களில் உள்ள பழைய மின் மோட்டார்களை மாற்றிவிட்டு புதிய தொழில்நுட்பத்தை டீசல் நிரப்பும் வங்கிகளில் செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் சரியான அளவு டீசல் கிடைக்கும்" என்று கூறினார்.