ராமநாதபுரம் மாவட்டத்தை அடுத்த பரமக்குடி எமனேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் நெசவாளர்கள் அதிக அளவில் தொழில் செய்து வருகின்றனர். இங்கு நெசவு செய்யப்படும் பட்டு, சில்க், பனாரஸ், காட்டன் சேலைகள் அனைத்தும் தமிழ்நாடு மட்டுமல்லாது மும்பை, குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இங்கு சுமார் ஆராயிரம் தறிகள் உள்ளன. ஒரு தறிக்கு மூன்று பேர் வீதம் 18 ஆயிரம் நெசவாளர்களும், மூன்றாயிரம் நெசவு சார்ந்த தொழிலாளர்களும் என மொத்தமாக 22 ஆயிரம் பேர் நெசவுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
நெசவுத் தொழிலை நசுக்கும் ஊரடங்கு கரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக சேலம், சூரத் ஆகிய பகுதிகளிலிருந்து நெசவு செய்வதற்கு தேவையான நூல், ஜரிகை உள்ளிட்ட மூலப்பொருள்கள் கிடைக்காமல் நெசவாளர்கள் தவிக்கின்றனர்.
பரமக்குடியில் மட்டும் 84 கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. அனைத்திலும் நெசவாளர்கள் நெய்த ரூ.15 கோடி மதிப்பிலான சேலைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன.
தற்பொழுது ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டாலும் சேலைகள் விற்பதில் மிகப்பெரிய சிக்கல் இருக்குமென்றும், மத்திய, மாநில அரசுகள் இதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு நெசவாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கி, தேக்கம் அடைந்துள்ள சேலைகளை விற்பனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நெசவாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இது குறித்து நெசவாளர் நாகராஜ் தெரிவித்தபோது, ”ஊரடங்கு உத்தரவு தொடங்கிய 10 நாள்களில் நெசவு செய்வதை நிறுத்தி விட்டோம். தற்பொழுது நெசவுப் பணி இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். நெசவாளர்களுக்கு தேவையான மூலப்பொருள்கள் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்தால் நெசவாளர்கள் வீட்டில் இருந்தவாறு பணிகளை மேற்கொள்வார்கள்” என்றார்.
இதையும் படிங்க:உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை - நலிவடைந்துவரும் கைத்தறி நெசவுத்தொழில்