ராமநாதபுரம்: தென் வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல், தமிழ்நாட்டில் பாம்பன், குமரி இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் அதீத கனமழையும், புயலும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிக மிக அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார்.
பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 209 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளான பால், உணவுப் பொருள்கள், குடிநீர் போன்றவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கழிப்பறை, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடலோர கிராமப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், எளிதில் மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், பழுதடைந்த வீடுகளில் குடியிருப்போர் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் வைத்திருக்கக்கூடிய நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்கிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுமக்கள் புயல் குறித்த எவ்வித அச்சமும் அடையத்தேவையில்லை எனக் கூறியுள்ள மாவட்ட ஆட்சியர், அதிகாரப்பூர்வ, நம்பதகுந்த ஊடகங்களில் வரும் செய்திகளை கேட்குமாறும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:புரெவி புயல்: இராமநாதபுரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்