தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நேரில் ஆஜராக சம்மன் - ஞானவேல்ராஜா நேரில் ஆஜராக சம்மன்
ராமநாதபுரம் : திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி மீண்டும் ஆஜராகக் கோரி ராமநாதபுரம் காவல் துறை சார்பாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி, 300 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நீதிமணி, ஆனந்த் ஆகியோரிடம் பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், ஸ்டூடியோ கிரீன் உரிமையாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஞானவேல்ராஜா, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று முன்னதாக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 7, 8 ஆகிய இரண்டு தேதிகளில் ராமநாதபுரம் துணை காவல் துறை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை முன்பாக ஆஜரான அவர், காவல் துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 10) காவல் துறையினர் முன்பு ஆஜராக வேண்டும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் ஞானவேல் ராஜாவின் சார்பாக அவரது வழக்கறிஞர் பாரத் ஆஜரானார். இது குறித்து பேசிய வழக்கறிஞர், ஞானவேல்ராஜா மீண்டும் காவல் துறையில் ஆஜராவதற்கு ஆறு வார காலம் அவகாசம் கேட்டிருப்பதாகவும், அது குறித்து காவல் துறையினரே தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது ஞானவேல்ராஜா இன்று (ஆக. 10) உடல் நலக் குறைவு காரணமாக நேரில் ஆஜராக இயலவில்லை என அவரின் வழக்கறிஞர் மூலம் தெரிவித்ததாகக் கூறினர். மேலும், ஆகஸ்ட் 12ஆம் தேதி மீண்டும் காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று ஞானவேல் ராஜாவுக்கு வாட்ஸ்ஆப் மூலமாக சம்மன் அனுப்பப்பட்டு, தொலைபேசி வாயிலாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.