பாம்பன் ரயில் பாலம் மன்னார் வளைகுடா மற்றும் பாக். நீரிணைப்பு கடற்பகுதிகளில் தமிழ்நாட்டோடு ராமேஸ்வரத்தை இணைக்கிறது. இந்த ரயில் பாலம் 2.3 கி.மீ. நீளம் கொண்டது. மேலும், இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும். கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்களில் 144 கர்டர்கள் இந்த ரயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன.
1914ஆம் ஆண்டில் பாம்பன் ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது 106 ஆண்டுகளுக்கும் மேல் கடலில் நிலை கொண்டுள்ளது. இப்பாலத்தில் 2007ஆம் ஆண்டு அகல பாதை பணிகள் நடைபெற்றன. 2015ஆம் ஆண்டு 28 கர்டர்களை மாற்றியமைக்கும் பணியும், இரண்டாம் கட்டமாக 2016ஆம் ஆண்டு 16 கர்டர்களும், மூன்றாம் கட்டமாக 2017ஆம் ஆண்டு 32 கர்டர்களும், நான்காம் கட்டமாக 2018 நவம்பரில் 27 கர்டர்கள் பொருத்தும் பணியும் நடைபெற்றது. மேலும் பாலத்தின் உறுதித் தன்மை குறித்து ரயில்வே அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்தனர்.இந்நிலையில் கடந்த 2019 ஜுலையில் ஐந்தாம் கட்டமாக சுமார் ரூ. 8 கோடி செலவில் 27 கர்டர்களை மாற்றும் பணி தொடங்கியது.