தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடல் கொந்தளிப்பினால் பாம்பன் பாலத்தின்மீது மோதும் மிதவைகள்! - பழைய பாம்பன் பாலம்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் பகுதியில் கடல் கொந்தளிப்பினால் கட்டுப்பாடு இழக்கும் மிதவைகள், பாம்பன் பாலத்தின் மீது மோதுவதால், பாலம் சேதமடையும் அபாயத்தில் உள்ளது எனப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Pamban old bridge
Pamban old bridge

By

Published : Nov 9, 2020, 5:34 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாம்பன் ரயில் பாலம் சுமார் 106 ஆண்டுகளைக் கடந்தும் ரயில் போக்குவரத்துக்கு உதவியாக இருந்தது வந்துள்ளது. இதுவரை எந்த விபத்தும் ஏற்பட்டதில்லை.

கடல் கொந்தளிப்பினால் பாம்பன் பாலத்தின்மீது மோதும் மிதவைகள்

இந்நிலையில், கப்பல்கள் செல்லும் வகையில் பாம்பன் பாலத்தின் இடையே அமைக்கப்பட்டுள்ள தூக்கு பாலம் கடந்த சில ஆண்டுகளாக வலுவிழந்து உள்ளது. இதனால் அவ்வப்போது ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாம்பன் கடலின் மீது இரு வழிப்பாதைக் கொண்ட ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு முடிவுசெய்து, ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலத்துக்கான பணிகள் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியது.

கரோனா ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், புதிய பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதில் கிரேன், கலவை எந்திரங்கள், பாறை துளைப்பான் கருவிகள் கொண்ட மிதவைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கடல் கொந்தளிப்பினால் பாம்பன் பாலத்தின்மீது மோதும் மிதவைகள்

பாம்பன் வடகடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் புதிய பாலத்துக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வரும் மிதவைகள் காற்றின் வேகத்தினால் கட்டுப்பாட்டை இழந்து, தற்போது உள்ள பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.

இந்நிலையில்நேற்று முன்தினம் அதிகாலை பாலப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட மிதவை ஒன்று, பாம்பன் பாலத்தின் மீது மோதியது.

இதனால் பாலத்தின் உறுதித் தன்மை பாதிக்கப்படுவதுடன், பயணிகளின் பாதுகாப்புக் கருதி ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுவருகிறது. கரோனா காரணமாக தினமும் ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், இது போன்ற காரணங்களால் அந்த ரயிலும் ராமேஸ்வரத்திற்கு வந்து செல்லாத நிலை ஏற்படுகிறது.

கடல் கொந்தளிப்பினால் பாம்பன் பாலத்தின்மீது மோதும் மிதவைகள்

வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால் பாம்பன் வடகடல் பகுதியில் தற்போது கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்தக் கொந்தளிப்பில் புதிய பாலத்துக்கான மிதவைப் படகு சிக்கியது. கிரேனுடன் உள்ள அந்த மிதவை கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அதில் இருந்த வேலையாட்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர். இதையடுத்து பழைய ரயில் பாலத்தில் மோதாமல் இருக்க அந்தக் கிரேன் மிதவையில் துழையிடப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

கடலில் மூழ்கடிக்கப்பட்டாலும் காற்றின் வேகத்தினால் அந்த மிதவை பழைய பாலத்தின் மீது மோதும் வாய்ப்பு உள்ளதாகவே மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் தற்போதைய ரயில் பாலம் மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

இதனைத் தடுக்கவும், தற்போது நடைபெற்று வரும் ரயில் சேவை பாதிக்காமல் இருக்கவும், பாம்பன் கடலில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய ரயில் பால பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. வடகிழக்கு பருவ மழை முடிந்த பின்னர் பணிகளைத் தொடர வேண்டும் என மீனவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details