ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பல ரயில்கள் நாள்தோறும் இயக்கப்பட்டுவருகின்றன. அங்கு நேற்றிலிருந்து பலத்த காற்று வீசிவருகிறது. இதனால் நேற்றைய தினம் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
இந்நிலையில், ராமேஸ்வரம் பகுதில் 58 கி.மீ. வேகத்துக்கு மேல் பலத்த சூறைக் காற்று வீசிவருவதால் பாம்பன் தூக்கு பாலத்தில் ரயில் இயக்க முடியாத நிலை உள்ளது. இதனால் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் போர்ட் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டது.
முன்பதிவு செய்த பயணிகளுக்கு அதற்கான பயணக் கட்டணம் திரும்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
அதேபோல் ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில், ராமேஸ்வரம்- மண்டபம் இடையே ரத்து செய்யப்பட்டு பின் மண்டபம்- மதுரை வரை இயக்கப்பட்டது. ராமேஸ்வரம்- சென்னை செல்லும் சேது விரைவு ரயில், ராமேஸ்வரம்-ஓக்கா ரயில்கள் ரத்து ஆகலாம் என கூறப்படுகிறது.
காற்று பலமாக வீசுவதால் ரயில்கள் தாமதம் ஆவது, ரத்து செய்யப்படுவது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு 12 மணிக்கு மேல் ரயில்கள் இயக்கப்பட்டது.