ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் மன்னார் கடல் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 13) மீன்பிடிக்க சுமார் 100 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று இன்று (ஆகஸ்ட் 14) கரை திரும்பினர். மீனவர்கள் வலையில் சீலா, கட்டா, பாறை, விலமீன், நகரை, திருக்கை, புள்ளி சுறா என 20க்கும் மேற்பட்ட பல வகையான மீன்கள் சிக்கின. இதில் அரிய வகையான கம்புமுரல் மீன் அதிக அளவு பிடிபட்டன.
மீனவர்கள் வலையில் சிக்கிய மருத்துவ குணம் நிறைந்த கம்புமுரல் மீன் - கம்புமுரல் மீன்
ராமநாதபுரம்: பாம்பன் மீனவர்கள் வலையில் மருத்துவ குணம் நிறைந்த கம்புமுரல் மீன் டன் கணக்கில் சிக்கியுள்ளன.
இந்த வகை மீன் முதுகுநாணி பிரிவைச் சேர்ந்தது. இவற்றின் முதுகுத் துடுப்புக்கு நேர் எதிராக குதத்துடுப்பு என இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கும். இதன் நீண்ட குறுகிய மூக்கும் அதில் கூரான பற்கள் தனித்தன்மையாகும். இந்த மீன் சுமார் நான்கு அடி நீளம் வரை வளரக்கூடியவை. இது பாம்பு போன்ற சுருளும் தன்மை கொண்டது.
இது குறித்து மீனவர்கள் கூறும் போது, கம்புமுரல் வகை மீன்கள் பல மருத்துவ குணங்கள் நிறைந்தன. இதனை தமிழ்நாட்டிலேயே பல்வேறு பகுதிகளில் மக்கள் கருவாடாக மாற்றி சமைத்து சாப்பிடுகின்றனர். இந்த மீனை உட்கொள்ளும் போது முதுகு தண்டு, தசைகள் வலுப்பெறும் என மீனவர்கள் கூறினர்.