சென்னை: இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் ராம கோபாலன் கரோனா தொற்று காரணமாக இன்று (செப்.30) உயிரிழந்தார்.
இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் ராம கோபாலன் இன்று காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சென்னைப் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியானது.
இதைத்தொடர்ந்து, அவரை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு பாஜக தமிழ்நாடு தலைவர் எல்.முருகன், திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவரின், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, காலை திருச்சி சீராதோப்பு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இதையும் படிங்க: இந்து முன்னணி மூத்த தலைவர் ராம கோபாலன் கரோனா தொற்று உறுதி