மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழந்து அதே இடத்தில் நீடித்துவருகிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா பகுதிகளில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை, அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ராமநாதபுரம் நகர் பகுதிகளிலும் மற்றும் பழங்குளம், பட்டினம்காத்தான், பாரதி நகர், கூரியூர் உள்ளிட்ட பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளான ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று (டிச. 08) காலை 6 மணி முதல் பரவலாகச் சாரல் தூவிவருகிறது.
ராமநாதபுரத்தில் பெய்யும் சாரல் மழை இதனால் ராமநாதபுரத்தில் 11.00 மில்லி மீட்டர், கமுதியில் 9.80 மில்லி மீட்டர், பரமக்குடியில் 10.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கடலாடியில் 9.00 மில்லி மீட்டர், ராமேஸ்வரத்தில் 17.20 மில்லி மீட்டர், தங்கச்சிமடத்தில் 11.40 மில்லி மீட்டர், பாம்பனில் 10.60 மில்லி மீட்டர், வட்டாணம் 13.60 மில்லி மீட்டர், தீர்த்தாண்டதானம் 21.50 மில்லி மீட்டர் ஆக என மொத்த மழை அளவு 155.10 மில்லி மீட்டரும், சராசரியாக 9.69 மில்லி மீட்டரும் பதிவாகியுள்ளது.
தற்போது தூவிவரும் இந்தச் சாரல் மிளகாய் மற்றும் பருத்தி பயிரிட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:காஞ்சி- செங்கை ஒருங்கிணைந்த மாவட்டத்தில் முழுக் கொள்ளளவை எட்டிய 776 ஏரிகள்!