ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் மற்றும் திருப்புல்லாணி தாலுகாவிற்கு உட்பட்ட 19 பள்ளிகளுக்கு ரூ. 2.75 லட்சம் மதிப்பில் மடிக்கணினிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு ஹச்டி செட் ஆப் பாக்ஸ் வழங்கும் விழா, இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
'நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது..!' - அமைச்சரின் பேச்சால் கூட்டத்தில் சலசலப்பு
ராமநாதபுரம்: "ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது" எனும் அமைச்சர் மணிகண்டனின் பேச்சு, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விழாவில் பேசிய அமைச்சர் மணிகண்டன், "ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 99 விழுக்காடு தண்ணீர் பிரச்னை பூர்த்தி அடைந்துள்ளது" என்று தெரிவித்தார். இந்த பேச்சால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்ப்பு கூட்டத்தில் மக்கள் தண்ணீர் பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருவது தொடர்பாக தொடர்ந்து மனுவை அளித்து வருகின்றனர். பல இடங்களில் 200, 300 அடி தோண்டிய பிறகும் கூட கிணறுகளில் நீர் கிடைக்காத நிலை உள்ளது. ராமநாதபுரத்தில் தினம்தோறும் மக்கள் நீருக்காக நீண்ட தூரம் செல்கின்ற நிலையில் அமைச்சரின் கருத்து மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.