ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் மீது இருவழி பாதை கொண்ட ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து அதன்படி 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவிருக்கும் புதிய ரயில் பாலத்துக்கான பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. இந்த புதிய ரயில் பாலம் வழியாக கப்பல்கள் செல்லும் வகையில் வெர்டிக்கல் டைப் தூக்குப் பாலமும் அமையவிருக்கிறது.
பாலம் அமைப்பதற்காக ராட்சத தூண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு (நவ.9) ராட்சத கிரேன் இருந்த மிதவை வேகமாக பாம்பன் பாலத்தின் மீது மோதி சிக்கிக்கொண்டது. அதனை எடுக்க இரவு முழுவதும் போராடியும் சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றமாக காணப்பட்டது. கடலில் நிறுத்தப்பட்டிருந்த மிதவைகள் தள்ளாடிக்கொண்டிருந்தன.
இதனை மீட்கும் பணியில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதநேரத்தில் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்வதற்காக பயணிகளுடன் பாம்பன் பாலத்தை கடந்து செல்வதற்காக வந்த சேது எக்ஸ்பிரஸ் வண்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இன்று (நவ.10) பாலத்திற்கு பாதிப்பு இல்லை என்று உறுதி செய்தபின் ரயில் பெட்டிகள் மண்டபம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து சேவை தொடரும் என எதிர்பார்க்கபடுகிறது.