தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதிய மிதவை ஒரு வாரத்திற்கு பிறகு மீட்பு

ராமநாதபுரம்: பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதிய மிதவை, கடல் சீற்றம் குறைந்ததையடுத்து, ஒரு வாரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது.

 பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதிய மிதவை ஒரு வாரத்திற்கு பிறகு மீட்பு
பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதிய மிதவை ஒரு வாரத்திற்கு பிறகு மீட்பு

By

Published : Nov 16, 2020, 7:20 PM IST

பாம்பனில் புதியதாக இரு வழிப்பாதை கொண்ட ரயில் பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இந்தப் புதிய ரயில் பாலத்திற்கான பணிகள் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்தாண்டு நவம்பரில் தொடங்கியது.

தற்போது பழைய பாலத்திற்கு அருகிலேயே கடலில் புதிய பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகின்றன. இதற்காக இரும்பு மிதவைகளில் கிரேன், கலவை எந்திரங்கள், பாறை துளைப்பான் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன

வடகிழக்குப் பருவமழையின்போது, பாம்பன் கடல்பகுதி சீற்றத்துடன் காணப்பட்டது. இதன்காரணமாக தூண் அமைக்கும் பணிகளில் பயன்படுத்தப்பட்டுவரும் மிதவைகள் காற்றின் வேகத்தினால் கட்டுப்பாட்டை இழந்து பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதும் சம்பவங்களும், மிதவைகள் மூழ்கும் சம்பவங்களும் அவ்வப்போது தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன.

தொடர் கடல் சீற்றத்தினால் புதிய பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கட்டுமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட கிரேன், கலவை எந்திரம், துளைப்பான்களுடன் கூடிய மிதவைகள் பாம்பன் வடகடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன.

நவம்பர் 09ஆம் இரவு சீற்றத்தினால் வடகடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மிதவை கிரேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாம்பன் ரயில் பாலத்தின் தூண்களுக்கு இடையில் சிக்கியது. இந்த விபத்தை தொடர்ந்து ராமேஸ்வரத்திற்கு ரயில்வே சேவை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் திங்கள்கிழமை பாம்பன் கடல் பகுதியில் கடல் காற்றின் வேகம் குறைந்ததினால் ரயில் பாலத்தில் சிக்கிக் கொண்டிருந்த இரும்பிலான மிதவையை மீன்பிடி படகுகள் மூலம் கயிறு கட்டி இழுத்து பாலத்திலிருந்து தூரமாக கொண்டுசென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details