ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் 15க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு மீன்வளத்துறை அலுவலர்கள் எல்லைத் தாண்டியதாக கூறி ஒரு படகுக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதித்துள்ளனர். மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் அடிப்படை பொருளான டீசல் விலை நாளுக்கு நாள் அதிகமாக உள்ளதால் மீனவர்களுக்கு மட்டும் டீசலுக்கு கலால் வரியை ரத்து செய்து டீசல் வழங்க வேண்டும்.
விசைப்படகுகளுக்கு அபராதம் விதித்த மீன்வளத்துறை அலுவலர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் - ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்
ராமநாதபுரம்: எல்லைத் தாண்டியதாக கூறி ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகுகளுக்கு அபராதம் விதித்த மீன்வளத்துறை அலுவலர்களை கண்டித்து மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட படகுகளை மீட்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூலை 20ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 800க்கும் மேற்பட்ட படகுகள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதை கண்டித்து நேற்று (ஜூலை 24) ராமேஸ்வரம் மீனவர்கள் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் சேசு ராஜா கூறுகையில், "எங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். இது தொடர்பாக மீன்வளத் துறையிடமும் தெரியப்படுத்தி உள்ளோம். இது குறித்த தகவல் சென்னையில் இருந்து வரவேண்டும் என்று அலுவலருக்கு விளக்கம் அளித்துள்ளனர். நிலைமை இப்படியே தொடருமேயானால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.