ராமநாதபுரம்:தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து பாமக ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரா.முத்தரசன் உள்ளிட்ட பலர் இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் குறித்து தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து இருந்தனர். குறிப்பாக, இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் தெற்கு துறைமுகத்தில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 18 பேரை, 2 படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இலங்கை மன்னார் தாழ்வுபாடு கடற்பரப்பில் மீன் பிடித்தபோது, ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை வழிமறித்து கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய 2 டோலார் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.