23 வருடங்களுக்கு முன்பு மாயமான மீனவர்! - இலங்கையில் இருப்பதையறிந்த குடும்பத்தினர் மகிழ்ச்சி!
ராமநாதபுரம்: 23 வருடங்களுக்கு முன் கடலில் தொலைந்த மீனவர், இலங்கையில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதை அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர்.
ராமநாதபுர மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள சல்லிமலை பகுதியில் வசித்து வருபவர் சரவணசுந்தரி. இவரது தந்தை பரதன் மீன் பிடிக்கூலியாக பணி செய்து வந்துள்ளார். 1996ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜான்சனுக்கு சொந்தமான படகில் பரதன் உள்பட நான்கு பேர் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று உள்ளனர்.
அப்போது படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பரதன் கடலில் மூழ்கிவிட்டதாகக் கூறினார். அதனால் அவர் கடலில் மூழ்கி இறந்து இருப்பார் என்று 23 வருடங்களாக குடும்பத்தினர் நம்பி வந்தனர். இந்நிலையில், சரவணசுந்தரியின் உறவினர் ராஜேஷ் யூடியூப்பில் கொழும்புச் சார்ந்த வீடியோ பார்த்தபோது, அதில் இலங்கை கொழும்பில் பரதன் மனநலம் பாதிக்கப்பட்டு பிச்சை எடுத்து வருவது தெரியவந்தது.