ராமநாதபுரத்தில் கரோனா தொற்று பரவல் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 600 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உள்ளன. அதில் 205 படுக்கைகள் நிறைந்துள்ளன. மற்ற 395 படுக்கைகள் காலியாக உள்ளன.
அதேபோல், பரமக்குடி மருத்துவமனையில் 200 ஆக்சிஜன் வசதி படுக்கைகளில் 99 படுக்கைகள் நிறைந்துள்ளன. அதில், 101 காலியாக இருப்பதாக அரசின் தகவலின்படி தெரிய வருகிறது.
இந்நிலையில், ஆக்சிஜன் தேவையுடன் பரமக்குடி அரசு மருத்துவமனைச் செல்லும் கரோனா நோயாளிகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இதேபோல், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் ஆக்சிஜன் படுக்கை இல்லை என்று நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனை பணியாளரிடம் கேட்டபொழுது," மொத்தமாக 222க்கும் மேற்பட்டோர் ஆக்சிஜன் படுக்கைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 74க்கும் மேற்பட்டோர் லேசான தொற்றுடன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக" தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாகத்தின் தகவலின் படி, ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளதாக கூறப்பட்டாலும், கள நிலவரத்தில் படுக்கைகள் நிறைந்து காணப்படுவது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் இந்த குழப்பத்தினை அரசு தெளிவுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது ராமநாதபுரம் மட்டத்தில் 3,252 பேர் காரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனை, வீடுகளில் தனிமைபடுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உஷாரான ராஜகோபாலன்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்