கமிஷன் பிரிப்பதில் நகராட்சி சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் இடையே மோதல் ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் கீழக்கரை நகராட்சியை திமுக கைப்பற்றியது. மேலும், திமுக சார்பில் 14 கவுன்சிலர்களும், அதிமுக சார்பில் ஒரு கவுன்சிலரும், சுயேட்சை 4 கவுன்சிலர்களும், எஸ்டிபிஐ ஒரு கவுன்சிலர், கம்யூனிஸ்ட் ஒரு கவுன்சிலர் என 21 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர்.
திமுக அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்றதால் திமுக சேர்மனாக, சஹானாஸ் ஆபிதா பொறுப்பேற்றார். இந்த நிலையில் கவுன்சிலர்களுக்கும், சேர்மனுக்கும் சுமூகமான உடன்பாடு ஏற்படாததால், கீழக்கரை நகராட்சி பகுதியில் முழுவதும் வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்த முடியாமல் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 18ஆம் தேதி கீழக்கரை நகராட்சி நகர் மன்றக் கூட்டம், சேர்மன் தலைமையில் நடைபெற்றது. அதில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த ரூபாய் 216 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு அனைத்து கவுன்சிலர்களும், அரசு தரப்பு அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சேர்மன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதில் திமுக கவுன்சிலர் நவாஸ் மற்றும் பயாஸ் ஆகியோர், ‘இந்த திட்டத்தின் விரிவான தகவல்களை தெரிவிக்க வேண்டும். இந்த திட்டத்தை எந்த ஒப்பந்ததாரர் செயல்படுத்த உள்ளார் என்பது போன்ற வினாக்களை’ சேர்மன் அறையில் எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சேர்மனின் தங்கை ஆமிதாபானு மற்றும் சகோதரர் ஹசன் ஆகியோர் கவுன்சிலரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேர்மனின் தங்கை பேசும்போது, ‘சேர்மன் ஆகுவதற்கு கவுன்சிலருக்கு 2 கோடி வரை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 10 லட்சம், 20 லட்சம் என அனைத்து கவுன்சிலர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
எந்த திட்டத்தையும் செயல்படுத்த விடாமல் தடுக்கிறீர்கள். நாங்கள் என்ன செய்வது, எவ்வளவு பணம்தான் செலவழிப்பது’ என்பது போன்ற ஆக்ரோஷமாக கத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
“2 கோடி ரூபாய் செலவழித்து இருக்கிறோம். அதனால் உங்களுக்கு பங்கு தர முடியாது” என வாக்குவாதம் செய்யும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன. இதன் மூலம், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை திமுக நகராட்சியில் முழுக்க முழுக்க கவுன்சிலர்களும், சேர்மனும் கமிஷனுக்காக சண்டை போட்டுக் கொள்வது வெட்ட வெளிச்சமாகி உள்ளதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
மேலும், திமுக சேர்மன் செகனாஸ் ஆபிதாவின் தங்கை ‘2 கோடி ரூபாய் கொடுத்துதான் சீட்டு வாங்கினோம். ஒவ்வொரு கவுன்சிலருக்கும் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை பணம் கொடுத்துதான் சேர்மன் ஆனோம்’ என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:முன்னாள் டிஜிபி மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!