தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 24, 2021, 12:17 AM IST

ETV Bharat / state

மானியத்தில் கட்டப்பட்ட மீன்பிடி படகுகள் - மத்திய அமைச்சர் இன்று மீனவர்களுக்கு வழங்கினார்

மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் புதிதாக கட்டப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகளை இராமேஸ்வரம் மீனவ பயனாளிகளின் பயன்பாட்டிற்காக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வழங்கினார்.

மீனவர்களுக்கான நலதிட்ட உதவிகள்
மீனவர்களுக்கான நலதிட்ட உதவிகள்

இராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், குந்துகால் மீன்பிடி இறங்கு தளத்தில் நேற்று (ஜன.23) நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கலந்து கொண்டு, மத்திய மாநில அரசுகளின் மானியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆழ்கடல் மீன்பிடி படகை, மீனவ பயனாளிகளின் பயன்பாட்டிற்கு வழங்கினார். தொடர்ந்து மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் குந்துகால் கிராமத்தில் ரூ.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மீன் இயங்குதளத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு தலா ரூ.56 இலட்சம் அரசு மானியத்துடன் (70 விழுக்காடு) தலா ரூ.80 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு ஆழ்கடல் மீன்பிடி படகுகளை மீனவ பயனாளிகளுக்கு வழங்கி, மேலும் 13 பயனாளிகளுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்கான வங்கி கடனுதவி ஆணைகளை வழங்கினார்கள்.

அதேபோல, ஒன்பது ஆழ்கடல் படகுகளின் உரிமையாளர்களுக்கான மானியத் தொகையாக ரூ.1.64 கோடி சம்மந்தப்பட்ட மூன்று படகு கட்டும் நிறுவனங்களுக்கு வழங்கினார்கள்.

பிரதான் மந்திரி மத்ஸ்யா சம்பட யோஜனா திட்டத்தின் கீழ் 27 மீனவ மகளிர் அடங்கிய 9 குழுக்களுக்கு கடல்பாசி வளர்த்தல் திட்டத்திலும், 4 பயனாளிகளுக்கு அலங்கார மீன் உற்பத்தி திட்டத்திலும், 5 பயனாளிகளுக்கு கடலில் கூண்டுகளில் மீன் வளர்ப்பு திட்டத்திலும் மீன்வளர்ப்பு பணிகள் மேற்கொள்ள ஆணைகளை வழங்கினார்கள்.

தொடர்ந்து, விசைப்படகு மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்கள், மீனவ மகளிர், கடற்பாசி வளர்ப்போர், கடலில் கூண்டுகளில் மீன் வளர்ப்போர் உள்ளிட்ட பல்வேறு மீனவ பிரதிநிதிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் மத்திய மீன்வளத்துறை அரசுச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு மீன்வளத் துறை ஆணையர் ஜெயகாந்தன், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:இலங்கையில் கொல்லப்பட்ட மீனவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

ABOUT THE AUTHOR

...view details