தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இது மாற்று வேட்பாளர்களின் கதை! - தேர்தலில் மாற்று வேட்பாளர் யார்

தினந்தோறும் சில பல திருப்பங்களுடன் களைக்கட்டத் தொடங்கி விட்டது தமிழ்நாட்டின் தேர்தல் திருவிழா. சித்திரை, வைகாசியில் தான் தேர்தல் வரும் என, ஆற அமர கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருந்தக் கட்சிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், பங்குனியிலேயே தேர்தலை அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். 'பொண்ணு கிடைச்சா போதாதா பந்தக்காலை நாட்டிட வேண்டியதுதானே' என்பது போல அதிரடிக்குத் தயாராகி விட்டன தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள். எல்லா கொண்டாட்டங்களின் தொடக்கமும், முகூர்த்த ஓலையில் தொடக்கம் பெறுவது போல, தேர்தல் திருவிழாவும், வேட்பு மனுத்தாக்கலிலேயே தொடங்குகிறது. ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கவிருக்கிற தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ கொண்டாட்டம், மார்ச்.12 வேட்பு மனுத் தாக்கலில் இருந்து தொடங்கியது.

வேட்பாளருக்கு பினாமி நியமிக்கும் கட்சிகள்
Dummy Candidate

By

Published : Mar 19, 2021, 10:01 AM IST

Updated : Mar 24, 2021, 5:03 PM IST

வேட்பு மனுத்தாக்கல்

கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிகள் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என, அரசியல் கட்சிகள் தேர்தல் திருவிழாவுக்காக மக்களை ஆயத்தப்படுத்தினாலும், பந்தக்கால் நாட்டியப் பின்பே தொடங்கம் பெறும் திருவிழாவைப் போல, வேட்பு மனுத் தாக்கலுக்குப் பின்பே வேகமெடுக்கின்றன தேர்தல் கொண்டாட்டங்கள்.

அரசியல் கட்சிகளுக்கு, வேட்பு மனுத் தாக்கலே ஒரு திருவிழா தான். எல்லா பெரியக் கட்சிகளின் வேட்பாளர்களும் நல்ல நாள், நேரம் பார்த்தே வேட்பு மனுத்தாக்கல் செய்ய செல்வர். வேட்பு மனுத் தாக்கலின் போது காட்டப்படும் 'வெயிட்'டு தான் கட்சிகளின் வெற்றிக்கான அட்சாரமாகப் பார்க்கப்படுகின்றது.

மேளதாளம், வாகனப் பேரணி என, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வாசல் வரை தொண்டர்கள் படை வந்தாலும், வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேட்பாளருடன் வெகு சிலரே அனுமதிக்கப்படுவர். வேட்பாளருக்கு நெருக்கமானவர்களாகச் சேர்ந்து வேட்பு மனுத்தாக்கல் செய்ய செல்லும் அச்சிறுக்கூட்டத்தில் ஒருவர் வேட்பாளருக்கான 'மாற்று வேட்பாளர்' என்பது நம்மில் பலருக்கும் தெரியாத உண்மை.

சுயேட்சைகளுக்குச் சலுகை பொருந்தும்?

ஒவ்வொரு தொகுதியிலும், தங்களின் கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வ சின்னத்தில் வேட்பாளரை நிறுத்தும் அரசியல் கட்சிகள் கூடவே அவருக்கு மாற்றாக மற்றொரு வேட்பாளரையும், வேட்பு மனுத்தாக்கல் செய்ய வைக்கும். இவர், மாற்று வேட்பாளர் என அறியப்படுவார். கட்சிகளால் முடிவு செய்து நிறுத்தப்படும் இந்த மாற்று வேட்பாளர்கள், கட்சிக்கு நெருக்கமானவர்களாகவோ, முதன்மை வேட்பாளருக்கு வேண்டியவர்களாகவோ இருப்பார்கள்.

வேட்பு மனு பரிசீலனையின் போது, ஏதாவது காரணங்களால் கட்சியின் முதன்மை வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டாலோ, வேட்பு மனு பரீசிலனைக்கு முன்பாக முதன்மை வேட்பாளர் காலமானாலோ, மாற்று வேட்பாளரின் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அவர் சம்மந்தப்பட்ட அக்கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப்படுவார். அதிலும் ஒரு 'ட்விஸ்ட்' இந்த மாற்று வேட்பாளர் சலுகை பெரிய அரசியல் கட்சிகளுக்குதானே தவிர, சுயேட்சைகளுக்கு கிடையாது.

மாற்று வேட்பாளருக்காகப் பரப்புரை செய்த எம்ஜிஆர்

வேடிக்கைகளுக்கு பஞ்சமில்லாத தேர்தல் களத்தில் மக்கள் செல்வாக்குள்ள தலைவர்கள் மாற்று வேட்பாளருக்காகப் பரப்புரை செய்த வினோதங்களும் நடந்துள்ளன. எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக, தன் முதல் சட்டப்பேரவைத் தேர்தலை கடந்த 1977ஆம் ஆண்டு சந்தித்தது.

அந்தத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அய்யாசாமி என்பவரை காலையில் அறிவித்தார் எம்ஜிஆர். அவருக்கு 'ஃபார்ம் ஏ, ஃபார்ம் பி' அனுப்பி வைக்கப்பட்டது; அவரும் வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். பின்னர், சில காரணங்களுக்காக அன்று மாலையிலேயே அலங்கியம் பாலகிருஷ்ணன் என்பவரை அதிமுகவின் வேட்பாளராக அறிவித்து, வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தார் எம்ஜிஆர்.

ஆனால் அய்யாசாமி, அவரின் வேட்பு மனுவைத் திரும்பப் பெறவில்லை. கட்சி சார்பில் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்ததால், அய்யாசாமியே அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஏற்கப்பட்டு, அவருக்கு அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டது; எம்ஜிஆர் அறிவித்த வேட்பாளர் அதிமுகவின் மாற்று வேட்பாளராகக் கணக்கில் கொள்ளப்பட்டார். அவர் தன் வேட்பு மனுவைத் திரும்பப் பெறாததால், சுயேட்சை வேட்பாளராக எடுத்துக் கொள்ளப்பட்டார். அந்தத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக பரப்புரை செய்தார் எம்ஜிஆர்.

மாற்று வேட்பாளருக்காக ஜெயலலிதாவின் பரப்புரை

டான்சி நிலபேர ஊழல் மற்றும் கொடைக்கானல் 'பிளசன்ட் ஸ்டே' ஹோட்டல் வழக்குகளில் ஜெயலலிதாவை குற்றவாளியாக அறிவித்து சிறை தண்டனை விதித்திருந்தது நீதிமன்றம். அந்த நேரத்தில், 2001ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்தது தமிழ்நாடு. அந்தத் தேர்தலில் நீதிமன்ற தண்டனைக் காரணமாக, நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் ஜெயலலிதா.

நான்கு இடங்களிலும், அவரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இரண்டு இடங்களில் அவர் தண்டனைக் குற்றவாளி என்பதற்காகவும், மற்ற இரண்டு இடங்களில் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி, ஒரு வேட்பாளர் இரண்டு இடங்களில் மட்டுமே போட்டியிடலாம். ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்ததைக் காரணம் காட்டி, அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

அந்தத் தேர்தலில் தான் போட்டியிட விரும்பிய தொகுதிகளில், தனது மாற்று வேட்பாளர்களுக்காகப் பரப்புரை செய்தார் ஜெயலலிதா.

இது மாற்று வேட்பாளர்களின் கதை!

மனைவியின் மாற்று வேட்பாளர் தங்கபாலு

கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, மைலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில், அப்போதைய அக்கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி தங்கபாலு மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக தங்கபாலு இருந்தார்.

வேட்பு மனு பரிசீலனையில் போதிய ஆவணங்கள் இல்லாததால் ஜெயந்தியின் மனு நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு மாற்று வேட்பாளரான தங்கபாலுவின் மனு ஏற்கப்பட்டது.

மாற்று வேட்பாளர் மனு தள்ளுபடி

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திண்டுக்கல் தொகுதியில் நடந்த வேட்பு மனு பரிசீலனையின் போது திமுகவின் மாற்று வேட்பாளரின் வேட்பு மனுத் தள்ளுபடி செய்யப்பட்டதாக அலுவலர் அறிவித்தார். அப்போது அதற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

மாற்று வேட்பாளர் தனது மனுவினை திரும்பப் பெறுவர் அல்லது முதன்மை வேட்பாளரின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால் மாற்று வேட்பாளரின் மனு நிராகரிக்கப்படுகிறது எனக் கூற வேண்டும் என்றனர். தனது உயர் அலுவலர்களிடம் விசாரித்த பின்பு தன் தவறை உணர்ந்த அலுவலர், மாற்று வேட்பாளரின் மனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார்.

ஒரு வார வேட்பாளர்

அங்கீகரிக்கப்பட்ட, பெரிய அரசியல் கட்சிகளின் முதன்மை வேட்பாளருடன், மாற்று வேட்பாளர் ஒருவரையும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது. அந்த மாற்று வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளரா என்ற கேள்வி எழலாம். முதன்மை வேட்பாளரின் வேட்பு மனுவில் ஏதாவது சிக்கல் இருக்கும்பட்சத்தில், மாற்று வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளராகிறார்.

அதாவது முதன்மை வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்படும் போது, மாற்று வேட்பாளரின் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். முதன்மை வேட்பாளரின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால் மாற்று வேட்பாளர் தன் மனுவினைத் திரும்பப் பெறுவது நடைமுறையாக உள்ளது.

அப்படி 'வாபஸ்' பெறாதபட்சத்தில், கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தாலும், சுயேட்சையாகவே கருதப்படுவார். மாற்று வேட்பாளரை முதன்மை வேட்பாளராக மாற்றும் மாயம் எல்லா தேர்தல்களிலும் நடந்து விடுவதில்லை என்றாலும், தேர்தல் உற்சாகத்தில் இந்த மாற்று வேட்பாளர் முறையும் ஒரு சுவாரஸ்யம் தான்.

இதையும் படிங்க:முதலமைச்சர் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு

Last Updated : Mar 24, 2021, 5:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details