புரெவி புயல் நேற்று (டிச. 02) இரவு திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. தற்போது ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடகிழக்கில் 90 கிலோமீட்டர் துாரத்தில் புயல் நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த காற்று வீசிவருகிறது. குறிப்பாக ராமேஸ்வரம் தீவு, பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி, மண்டபம் பகுதிகளில் 50 லிருந்து 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் அந்தப் பகுதிகளில் உள்ள பனை, தென்னை மரங்கள் தலைவிரி கோலத்தில் நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றன.
பாம்பனில் 60 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசுவதால் பொதுமக்கள் அச்சம் பாம்பன் பாலம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேலும், அலைகள் 5 அடி முதல் 6 அடி உயரத்துக்கு எழுந்து கரையை மோதிச் செல்கின்றன. புரெவி புயலானது இன்று (டிச. 03) பிற்பகலில் பாம்பனைக் கடந்துசென்று புதுக்கோட்டை அருகே கரையைக் கடக்கும். அதையடுத்து புயல் நகர்ந்து சிவகங்கை, மதுரை வழியாகச் செல்ல இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்கள் படகுகளைப் பாதுகாக்க அவ்வப்போது சென்று அதனைக் கண்காணித்துவருகின்றனர். இதனால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: புரெவி புயல் தாக்கம்: ராமேஸ்வரத்தில் 120.20 மிமீ மழைப்பதிவு!