மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாம்பன் சாலை பாலத்தில் விழிப்புணர்வு நடவடிக்கையாக 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மனிதச்சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மனிதச்சங்கிலி நிகழ்ச்சியினை "புக் ஆஃப் வேர்ல்ட் ரிக்கார்ட்ஸ்" என்ற அமைப்பு பாம்பன் கடல் பாலத்தில் நீளமான மனிதச் சங்கிலி என்ற பிரிவின் கீழ் சான்றிதழ் வழங்கியது.
இந்நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பொதுப் பார்வையாளர் நரேந்திரசிங் பர்மார், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பொதுப் பார்வையாளர் ஆனந்த் ஸ்வரூப், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கான காவல் துறை பார்வையாளர் ஸ்ரீனிவாசலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
3000 பேர் பங்கேற்ற மனித சங்கிலி இந்த மனித சங்கிலியில் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மீனவ சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் பாம்பன் கடலில் 15 நாட்டுப் படகுகள் விழிப்புணர்வு உறுதிமொழி பதாகைகளை தாங்கி அணி வகுத்து நின்றன.
இது குறித்து ஆட்சியர் வீரராகவ ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 100 விழுக்காடு வாக்குப்பதிவு எய்துதல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரம் ஆகியவற்றின் செயல்பாடு குறித்து விளக்கமளித்தல், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட நோக்கங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள, ஆசிய அளவில் மிக நீளமான கடல் பாலங்களில் ஒன்றாக கருதப்படுகின்ற பாம்பன் பாலத்தில் 3000-க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி எவ்வித தூண்டுதலுக்கும் ஆட்படாமல் சுதந்திரமாக தங்களது வாக்குகளை பதிவு செய்திட வேண்டும்" என்றார்.
இந்நிகழ்ச்சியில், இந்திய கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேஷ், இந்திய கப்பற்படை துணை கமாண்டர் சிமோத் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.