ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டதில்நடைபெற்ற மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்ற கூட்டத்தில் ராமநாதபுர நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் பேச்சுக்கு பாஜக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டின் சாகர் பரிக்ரமா திட்டத்தின் யாத்திரையின் எட்டாவது கட்டத்தின் முன்றாம் நாள் பயணமாக இராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் துறைமுகத்திற்கு வருகை தந்த மத்திய மீன்வளம், கால் நடை, பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பயனாளிகள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடினர்.
அப்போது, பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "பாரத பிரதமரால் தொடங்கப்பட்ட சாகர் பரிக்ரமா திட்டத்தின் படி பொது மக்களுக்கு நேரடியாக அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும் மேலும் மக்களோடு இணைந்து அவர்களுடைய ஆலோசனைகளை பெறும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இது மீன் வளத்துறை பெரும் முன்னேற்றத்தை கொடுத்துள்ளது. தற்போது இராமநாதபுரத்திற்கு கடல்பாசி வளர்ப்பதற்கு என்று தனி பார்க் அமைக்க ரூ.127 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட எல்லையான கன்னிராஜபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மாவட்ட மண்டல தலைவர்கள், உறுப்பினர்கள் என ஏராளமான கட்சியினர் வரவேற்பு அளித்தனர். இவ்விழாவில் ராமநாதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ’ஒன்றிய அமைச்சர்’ என்று வரவேற்றுபேசிய போது அங்கு கூடியிருந்த பாஜக கட்சியினர் மத்திய அமைச்சர் என்று கூற வேண்டும் என்று கூச்சலிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்கு இருந்த காவல்துறையினர் கூடியிருந்த கூட்டதை அமைதிப்படுத்தினர் அதன் பின்பு, தொடர்ந்து மீனவர்களோடு கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படிங்க:Aditya-L1: சூரியனையும் தொட்டுவிடலாம்.. ஆதவனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலம்! இஸ்ரோ ரெடி!