ராமநாபுரம்: மகர்நோன்பு பொட்டல் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீத் (65). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஊர் திரும்பினார்.
இந்நிலையில் நேற்று (செப்.03) நள்ளிரவு தனது மனைவியுடன் வீட்டில் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களை உடைத்து, வீட்டைச் சுற்றி பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இருசக்கர வாகனம் தீயில் கருகி நாசம்
இதில், வீட்டின் முன்பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம், மின் மீட்டர், பிளாஸ்டிக் பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின.
இந்நிலையில், சாகுல் ஹமீதும் அக்கம் பக்கத்தினரும் இணைந்து தண்ணீர் ஊற்றித் தீயை அணைத்துள்ளனர். பின்னர் இது குறித்து சாகுல் ஹமீது பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோடநாடு கொலை - வாய் திறந்த எஸ்டேட் மேனேஜர்?